VijayramOnline Blogging
Request
To make your entry, choose a blog...


   Create your own blog

===========================================================================
Subject: உத்தராயணம், தட்சிணாயனம்
Message: #0  2025-04-21  
உத்தராயணம், தட்சிணாயனம் என்றால் என்னவென்று தெரியுமா?

சூரியனின் நகர்வின் அடிப்படையில் இயற்கையாக அமையும் புண்ணிய காலங்கள் 
உத்தராயண புண்ணிய காலமும் தட்சிணாயன புண்ணிய காலமும் ஆகும். 
உத்தராயணம் என்றால் வடக்கு என்று பொருள். அயனம் என்றால் பயணம். 
சூரியன் வடக்கு திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் நாள்,  
அதாவது தை மாதம் முதல் நாள் உத்தரயண புண்ணிய காலத்தின் தொடக்க 
நாள் ஆகும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயணம் ஆனி வரை இருக்கிறது. 
இந்த ஆறு மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார். இது 
முடிந்தவுடன் ஆடி மாதம் முதல் நாள் சூரியன் தென்திசை நோக்கிய தனது 
பயணத்தைத் தொடங்குகிறார். இதை தட்சிணாயனம் என்று அழைக்கிறார்கள். 
ஆடி மாதம் முதல் நாள் தெற்கு நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கும் சூரியன், 
அடுத்த ஆறு மாதங்களுக்கு அதாவது பங்குனி மாதம் வரை தெற்கு நோக்கியே 
பயணிக்கிறார்.

சில வைணவத் திருத்தலங்களில் பெருமாளின் கருவறைக்கு உத்தராயண வாசல், 
தட்சிணாயன வாசல் என இரு வாசல்கள் இருப்பது வழக்கம்.  உத்தராயண 
காலத்தில் உத்தராயண வாசலும், தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் 
திறந்திருக்கும்.

நமக்கு உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரண்டு காலங்கள் கூடிய ஓர் 
ஆண்டே தேவர்களின் ஒரு நாளாகக் கருதப்படுகிறது. இவற்றுள் உத்தராயணம் 
என்பது தேவர்களின் பகல் பொழுதாகவும், தட்சிணாயனம் என்பது தேவர்களின் 
இரவுப் பொழுதாகவும் கூறப்படுகிறது. உத்தராயண காலத்தின் பகல் பொழுது 
நீளமாகவும், தட்சிணாயன காலத்தில் இரவுப் பொழுது  நீளமாகவும் இருப்பதை 
நாம் பார்க்க முடியும்.

உத்தராயண புண்யகாலத்தின் தொடக்க நாளான தை மாத முதல் நாளன்று 
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அன்று மகர சங்கராந்தி 
பண்டிகையும் கொண்டாடப்பட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை 
வழிபடுகிறோம். அதேபோல தட்சிணாயனத்தின் தொடக்க  நாளான ஆடி மாத 
முதல் நாளிலும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். அன்று தேங்காய்ப்பாலில் 
பாயசம் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.
Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 0 of 1

 Print this Page
       
===========================================================================